×

இயற்கையின் கொடை பிச்சா ‘வரம்’: 8வது அதிசயமாக வியக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், ஸ்கூபா, டைவிங் நீர் விளையாட்டுகள் அமைக்கப்படுமா?

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு போட்டியாக உடலுக்கு ஜில்லும், மனத்திற்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு இடம்தான் பிச்சாவரம். இயற்கை அன்னை தன் அழகை கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடைந்ததோ என எண்ணும் அளவுக்கு பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் பரந்து விரிந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிச்சாவரத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பச்சை போர்வை போர்த்தியதைப் போல பரந்து விரிந்து காணப்படுகிறது பிச்சாவரம் வனப்பகுதி. சதுப்பு நிலங்களில் வளரும் சுரபுன்னை என்ற தாவரங்களை அடர்த்தியாகக் கொண்டு காணப்படுவதுதான் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். வடஇந்தியாவில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் கங்கை ஆறு கடலில் கடக்கும் இடத்தில் இதுபோன்ற சுரபுன்னை எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கரபுன்னைக்காடு தமிழகத்தின் பிச்சாவரத்தில்தான் உள்ளது. அதனால்தான் இந்த பிச்சாவரம் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. தண்ணீருக்குள் வேர்களைக் கொண்டு அடர் தாவரங்களாக காணப்படும் இந்த காட்டுப்பகுதிக்குள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுசிறு கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் வழியே படகு சவாரி செய்வது ஆனந்தமான தருணம்.

படகில் காட்டுப் பகுதியில் உள்ள கால்வாயில் ஒருபுறத்தின் வழியாக உள்ளே சென்று மறு புறத்தின் வழியாக வெளியே வரும்போது பயணிகளுக்கு கிடைக்கும் இனிய அனுபவத்தை வார்த்தைகளால் எழுத முடியாது. நாரையும் அறியா நான்காயிரம் கால்வாய்கள் என கூறப்படுவதற்கு ஏற்ப, சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களை கொண்டு இந்த காட்டுப்பகுதி விளங்குகிறது. அதனால்தான் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

உப்பனாறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரத்தில்தான் இந்த தாவரங்கள் பரந்து, விரிந்து காணப்படுகிறது. தில்லை, சுரபுன்னை, என பல வகையான தாவரங்கள் நிறைந்த காடாக இந்த பிச்சாவரம் வனப்பகுதி திகழ்கிறது. சுரபுன்னை தாவரத்திலிருந்து முருங்கைக்காயைப்போல நீண்டிருக்கும் காய்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள சதுப்பு நிலத்தில் விழுந்து, பின்னர் அதுவே வேராகி செடியாக மாறுகிறது. இந்த இயற்கை எழில் கொஞ்சும் சுரபுன்னை தாவரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகளுக்குள் மரங்களை பார்த்தபடியே படகு சவாரி செய்வது அனுபவிக்க வேண்டிய ஆனந்த பயணம் ஆகும்.

8வது அதிசயமாக பிச்சாவரத்தை பார்த்து வெளிமாநில சுற்றுலா பயணிகள் வியக்கும் நிலை உள்ளது. உலகின் 2வது பெரிய அலையாத்தி காடுகள் எனப்படும் பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு மட்டுமல்ல, சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்தும் இந்த காடுகள் மக்களை காப்பாற்றுவதாகவும், முன்பெல்லாம் 4 மணி நேர படகு சவாரி இருந்தது. ஆனால் தற்போது கூட்டம் அதிகரித்து வருவதால் 4 மணிநேர படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடற்கரை வரை சென்று வரலாம் என சுற்றுலா படகோட்டிகள் கூறுகின்றனர்.

இயற்கை அழகோடு பார்ப்பதற்கு ஏற்ற இடமாக பிரச்சாரம் இருப்பதால் எவ்வளவு வெயில் அடித்தாலும் காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டால் வெயில் தெரிவதில்லை. அந்த அளவிற்கு நல்ல ரம்மியமான இடமாக இருப்பதாக கூறும் சுற்றுலா பயணிகள், சுற்றிப் பார்ப்பதற்கு இந்த இடம் அழகாக இருக்கிறது என்கின்றனர். கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் படகு சவாரிகள் இருந்தாலும் இந்த பிச்சாவரத்தில் அடர்ந்த காட்டுக்குள் காட்டுப் பகுதிக்குள் படகு சவாரி செய்வது ஆனந்தம் அளிப்பதாக கேரளாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதற்கு அடுத்த இடமாக பிச்சாவரத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் பிச்சாவரத்தில் படகு சவாரி தவிரவேறு எதுவும் மக்களை கவரும் வகையில் இல்லை. அதனால் பிச்சாவரம் பகுதியில் கடலும், தண்ணீர் சூழ்ந்த இடங்களும் இருப்பதால் ஸ்கூபா டைவிங் போன்ற தண்ணீர் சார்ந்த விளையாட்டுகளை அமைப்பதோடு, போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தி கொடுத்தால் இன்னும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதனால் இந்த பகுதியும் வளர்ச்சி அடையும் என்பது இப்பகுதி மக்களின், வியாபாரிகளின் கருத்தாக உள்ளது. இதுதொடர்பாக அரசுக்கும், சுற்றுலாத் துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* திரைப்பட சூட்டிங் தளம்
பிச்சாவரம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பதால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தின் முக்கிய காட்சிகள் திரைப்படமாக்கப்பட்டது. அதன்பிறகு சின்னவர் சூரியன், சமீபத்திய துப்பறிவாளன், தசாவதாரம் என 10க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களும் இங்கு படமாக்கப்பட்டதாக படகோட்டிகள் கூறுகின்றனர். திரைப்படங்களில் இந்த காட்சிகளை பார்த்த பலரும் இது எந்த இடம் என கேள்வி எழுப்பும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது பிச்சாவரம்.

* படகில் செல்ல கட்டணம் எவ்வளவு?
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 50க்கும் மேற்பட்ட துடுப்பு படகுகளும், 10க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளும் இருக்கின்றன. துடுப்பு படதில் 4 நபர்கள் 1 மணி நேரத்தில் 1 கி.மீ. தூரம் சென்று காட்டின் அழகை ரசிப்பதற்கு ரூ.450 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுபோல் 6 நபர்கள் 1 மணி நேரத்தில் 1 கி.மீ. பயணம் செய்வதற்கு ரூ. 650 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல் மோட்டார் படகில் அதிகபட்சமாக 8 நபர் வரை 2 கி.மீ. தூரம் பயணிக்கலாம். இதற்கு 40 நிமிடத்திற்காக ரூ.1,850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

* ரூ.15 கோடியில் மேம்பாட்டு பணிகள்
சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக பிச்சாவரம் இருப்பதால் தமிழக அரசு சார்பில் சுமார் ரூ.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகள், நவீன உணவகம், அலுவலக அறை, பயணிகள் காத்திருக்கும் கூடம், வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட பார் வசதி, ஆலோசனைக் கூடம் போன்ற பல்வேறு வசதிகளை மேம்படுத்த பணிகள் நடந்து வருகிறது.

* அலையாத்தி காடுகளுக்குள் ஆனந்த படகு சவாரி பேருந்து வசதிகள்
பிச்சாவரத்தை பொருத்தவரை பேருந்து வசதி சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி இருக்கிறது. சிதம்பரம் நகருக்கு எல்லா பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது. சிதம்பரம் நகரில் இருந்து சுமார் 15கிமீ தொலைவில் உள்ள பிச்சாவரத்திற்கு 2 வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது.

வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூரிலிருந்தும் பிச்சாவரத்திற்கு நேரடி பஸ் வசதி உள்ளது. உலக அதிசயங்கள் ஏழல்ல, இது எட்டாவது அதிசயம் என்று எண்ணும் அளவுக்கு ரம்யமாக விளங்கும் பிச்சாவரத்தை நாம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்த்து மகிழ வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆவலாகவும் உள்ளது.

The post இயற்கையின் கொடை பிச்சா ‘வரம்’: 8வது அதிசயமாக வியக்கும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், ஸ்கூபா, டைவிங் நீர் விளையாட்டுகள் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bichavaram ,Kodaikanal ,Ooty ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...